6'வது ஆண்டில் தன்னார்வலர்களின் நீர் பயணம்..!! கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை

    பொருளாக பார்த்தால் ஒரு சார்ட் பேப்பர், கொஞ்சம் கலர் பென்சில்கள், நொய்யல் ஆற்றை பற்றி, அதன் குளங்களை பற்றியான தரவுகள், வரைபடங்கள் இது மட்டும் வைத்துக்கொண்டு 2017 பிப்ரவரி மாதம் பேரூர் பெரிய குளத்தின் கரைகளில் கலந்தாலோசித்து, தொடர்ந்து ஒரு வாரம் நீர்நிலைகளை பாதுகாப்போம் என்ற அறைகூவலை விடுத்திருந்தோம்.


    அதை தொடர்ந்து வந்த தனித்தனி மனிதர்கள், பொருளாதாரப் பின்னணி இல்லாத சூழலில் தன்னம்பிக்கையும் இயற்கையின் மீதும், நொய்யல் மீதும் கொண்ட அன்பு, காதலால், நம் சமூகத்திற்கு ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இணைந்த கரங்களை கொண்டு துவங்கப்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தற்பொழுது 5 ஆண்டுகளை கடந்து 6-வது ஆண்டில் எந்தவித ஆரவாரமின்றி அடியெடுத்து வைத்து பயணிக்கிறது..!!

    தொற்றின் காரணமாக களப்பணி செய்திருக்க கூடிய வாரங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருந்தாலும், 223 வாரங்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில், ஆயிரக்கணக்கான கரங்கள், மண்ணிலும் கல்லிலும் நீரிலும் சகதிகளில் - குப்பை, பிளாஸ்டிக் அப்புறப்படுத்துவதும், நீர்நிலைகள் ஓரம் மரங்களை நடுவது, இயந்திரங்களைக் கொண்டு குட்டைகளைத் தூர்வாருதல், வாய்க்கால்களை தூர்வாருதல் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை வெறும் கை கால்களை மூலதனமாக வைத்து துவங்கிய இந்த அமைப்பு செய்துள்ளது.

    இதயத்தில் ஈரம் கொண்டு புவியின் ஈரம் காப்போம் என்ற தாரக மந்திரத்துடன்... நீர் நிலம் காற்று மற்றும் பல்லுயிர் பாதுகாக்க தொடர்ந்து பயணிக்க இருக்கிறது...!!

    பல ஆண்டுகளாக வறண்டு இருந்த வெள்ளலூர் குளம், நீர் நிறைந்த நிலமாக மாற்ற பாடுபட்ட அனைத்து கரங்களுக்கும் நன்றியினை காணிக்கையாக தெரிவித்து கொள்கிறோம்    

    இன்றும் அந்த நிலத்தை சுற்றி பசுமை சூழல் மற்றும் விவசாயம் பெருகி உள்ளது. குளத்தை சுற்றி கிட்டத்தட்ட 500 வகையான தாவரங்கள் புதிதாக நடப்பட்டுள்ளது. அவர்களை ஆதாரமாகக் கொண்டும் இன்று பல நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. பட்டாம்பூச்சிகள், குறிப்பாக வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக மாறியுள்ளது... மேலும் பல்வேறு உயிரினங்களுக்கு பூச்சி இனங்களுக்கு உயிர் சூழல் கொண்ட வாழ்விடமாக திகழ்கிறது.

    ஒரு ஐந்து ஆண்டுகளில் ஒரு தொழில் தொழிற்சாலையை உருவாக்கலாம். ஆனால் பல்லுயிர் சூழலை உருவாக்குவது கடினம், அது நிகழ்ந்துள்ளது ..!!

     முதல் காரணமாக இருந்த அனைத்து தன்னார்வலர்கள், கொடையாளர்களுக்கும், அரசு துறையினருக்கும், ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்..!!

    எண்ணிக்கைகளில் வருடங்கள் அதிகரிக்கலாம்...நாம் கற்கவேண்டிய பாடம் இனியும் ஏராளம். நம் ஊரில் உள்ள நீர் ஆதாரங்களையும் நில வளத்தையும் உயிர்ச் சூழலையும் பாதுகாக்க தொடர்ந்து பயணிப்போம்.. துணை நிற்போம்..
    இதயத்தின் ஈரம் கொண்டு புவியின் ஈரம் காப்போம்



நன்றி
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

Post a Comment

0 Comments