1992ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராகத்தான் இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான கிரிக்கெட் பூமியிலிருந்து வந்து சுழற்பந்துவீச்சில் சாதனை படைத்தவர்.
சச்சின் vs வார்னே மோதல்
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒன்று. 29 முறை இருவரும் சந்தித்ததில், 4 முறை மட்டுமே
சச்சின் அவுட்டாகியிருக்கிறார். வார்னேயின் சுழலில் பலர் வீழ்ந்தாலும் சச்சின்
மட்டுமே திறமையாக எதிர்கொள்வார். 1998ம் ஆண்டு சச்சின் தனது 25வது பிறந்த
நாளன்று சார்ஜாவில் நடைபெற்ற கொக்ககோலா கோப்பைக்கான இறுதியாட்டத்தில் 134 ரன்கள் விளாசி, ஆஸ்திரேலியாவை
வெல்லக் காரணமாக இருந்தார். அன்றைய ஆட்டத்தில் 10 ஓவர்களில் விக்கெட்டே எடுக்காமல் 61 ரன்களை
வாரிக்கொடுத்த ஷான் வார்னே, சச்சினிடம்
தனது டீ சர்ட்டில் ஆட்டோகிராப் வாங்கிய பெருந்தன்மை மறக்க இயலாதது!
இந்திய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதல் கோப்பையை வென்ற பெருமைக்குரிய கேப்டனான ஷேன் வார்னேக்கு இந்தியா மீதும், இந்தியர் மீதும் கூடுதல் அன்புண்டு. இதன்காரணமாக, கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் உச்சத்தில் இருந்தபோது இந்திய வீரர்களின் நலனில் அக்கறையோடு விசாரித்து ட்வீட் போட்டிருந்தார்.
ஆஸ்திரேலிய
சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தனது 52 வது வயதில்
இன்று மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தியை கேட்டதிலிருந்து அவரைப்பற்றிய
நினைவுகளும் என் சிறு வயது நினைவுகளும் ஒருசேர வந்துபோகின்றன. விவரம் தெரிந்து
கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தபோது என் ஆதர்ச ப்ளேயர் முகமது அசாருதீன். அவருக்கு
அடுத்த அதிகளவில் கவனம் ஈர்த்த அயல்நாட்டு வீரர் என்றால் அது ஷேன் வார்னே. நாக்கை
வெளியே துருத்திக்கொண்டு அட்டகாசமான உடல்மொழியுடன் அவர் பந்து வீசுகிற அழகே தனி.
பெரும்பாலும்
வேகப்பந்து வீச்சாளர்களே கோலோச்சிவந்த கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம்
செலுத்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என அவரை சொல்லமுடியும். அதுவும் முழுக்க
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிப்போன இன்றைய கிரிக்கெட்டிலிருந்து ஷேன் வார்னே
சாதனைகளை ஒப்பிட்டுப்பார்த்தால் அவரது உயரம் தெரியும். ஆடுகளம் எப்படிப்பட்டதாக
இருந்தாலும் அவரால் பந்தை சுழலச்செய்யமுடியும் என்பதுதான் வார்னேவின் ஸ்பெஷல்.
லெக் ஸ்பின் தான் போடப்போகிறார் என்பது தெரியும் என்றாலும் பந்து எந்த இடத்தில்
பிட்ச் ஆகி எந்த இடத்தில் டர்ன் ஆகும் என்பதை பேட்ஸ்மேன் மற்றும் கீப்பர் இருவருமே
கணிப்பது கடினம். முழுக்க இடப்புறம் நகர்ந்து பந்தை கவர் ட்ரைவ் அடிக்கலாம் என்று
பார்த்தால் பந்து முன்கூட்டியே பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகரும். முட்டி
போட்டு ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சிக்கும்போது எல்பிடபுள்யூ ஆக வாய்ப்பு அதிகம் என
ஒரு மாயாஜால சுழற்பந்து வீச்சாளராகவே அவர் திகழ்ந்தார்.
1992 ம் ஆண்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆட வந்த வார்னே 94, 97 , 2000 ஆண்டுகளில்
கிரிக்கெட்டின் பைபிள் எனப்படும் விஸ்டன் புத்தகத்தில் தன் பெயரை
இடம்பெறச்செய்தார். 2000ம் ஆண்டு நூறு
ஆண்டுகளில் உலகம் கண்ட தலைசிறந்த 5 வீர்ர்களில் ஒருவராக வார்னேவை விஸ்டன்
தேர்ந்தெடுத்தது. அவரது கிரிக்கெட் வாழ்வில் அவரால் சோபிக்க முடியாமல் போன எதிர்
ஆட்டக்கார்ர் என்றால் அது ச்ச்சின் டெண்டுல்கர் தான். 30 ரன்கள் சராசரி
கொண்ட வார்னே, டெண்டுல்கருக்கு
எதிராக மட்டும் 47 ரன்கள்
வைத்திருந்தார். சச்சின் Vs வார்னே என்பது
அந்த காலகட்டத்தில் மிகவும் விரும்பப்பட்ட , எதிர்பார்க்கப்பட்ட போட்டிகள். டெஸ்ட்
போட்டிகளில் 700 விக்கெட்டுகளை
கடந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு சதம் கூட அடிக்காமல் 3000 ரன்களை எடுத்த வீர்ர் என்ற விநோத சாதனையும்
அவருக்கு உண்டு.
1994 ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் வீசிய அந்த பந்து Ball of the Century என்று இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது.
12 மணி நேரத்திற்கு முன்பு சக முன்னாள் வீரர் ரோட் மார்ஸ்ஸின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருந்த ஷேன் வார்னே தாய்லாந்தில் மாரடைப்பு காரணமாக ஷேன் வார்னே உயிரிழந்தது என்பது மனித வாழ்க்கைதான் எவ்ளோ விசித்திரமானது
ஆழியாறிலிருந்து
அட்டகட்டிக்குப் போகும் வழியில் இருக்கும் ஹேர்பின் வளைவுகள் ஒவ்வொரு முறையும்
ஷேன் வார்னேயின் சீறித் திரும்பும் லெக் ஸ்பின்னை நினைவூட்டும். வார்னே பந்து
வீச்சை எதிர்க்கொள்வது கரணம் தப்பினால் மரணம் என்ற சாகசம்தான்.
பெரிய பெரிய
ஜாம்பவான்களை சிறுபிள்ளையாக்கித் தவழ வைத்த லெக் ஸ்பின் லெஜெண்ட் ஷேன் வார்னே.
இந்திய அணியிடம் மட்டும்தான் அவருடைய மந்திரம் பலித்ததில்லை.
முதல் டெஸ்ட்
போட்டியில் ரவிசாஸ்திரி அடித்த அடி அப்படி. அந்த அடி வார்னேயின் நெஞ்சில் இந்திய
அணி பற்றிய பயத்தைச் செதுக்கி இருக்க வேண்டும். பின்னாட்களில் சச்சின், லக்ஷ்மண்
போன்றவர்கள் அப்பயத்தை நிரந்தரமாக்கி விட்டார்கள்.
ஆனால், மற்ற
நாடுகளுக்கு வர்னே எப்போதும் கர்ஜிக்கும் சிம்மசொப்பனம். லெக் ஸ்பின், கூக்ளி , டாப்
ஸ்பின்னர் போடுவது எல்லோராலும் முடியலாம். ஆனால், பந்து எத்தனை இஞ்ச் திரும்ப வேண்டும் என்ற
துல்லியம் வார்னேயை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.
கடைசி கட்ட நாட்கள்
மைக்கேல்
ஜாக்சனின் அபரிமிதமான நளினம் நிறைந்த அசைவுகளைப் போல், தன்
பந்துவீச்சின் அசைவுகளால் ரசிகர்களைப் பரவசப்படுத்திய 52 வயது
வார்னேயின் மரணம் நம்ப முடியாத பேரதிர்ச்சி.
இப்போதுதான்
முடிந்தது போன்றிருக்கிறது வார்னே, முரளிதரன், கும்ளேயின் கள சாம்ராஜ்யம். அதற்குள்
சுழல்வீச்சுக் கிரிக்கெட் வார்னேயை இழந்திருப்பது பெரும் துக்கம்.
ஒரு சிலரால்தான் நம் மனதில் எப்போதும் சுழன்று கொண்டேயிருக்கும் நினைவுகளை மீதம் விட்டுச் செல்ல முடியும். ஷேன் வார்னே, அப்படிப்பட்ட ஒருவர்.
ஷேன் வார்ன் இன்ஸ்டாகிராமில் தனது விடுமுறையை எடை குறைப்பதன் ஒரு பகுதியாக தாய்லாந்தில் தனது நேரத்தை செலவிட விரும்புவதாக பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான், கோ சாமுய்யில் அவர் பரிதாபமாக இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது உடல் நிலைக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தார். வார்ன், தாய்லாந்தில் உள்ள அவரது வில்லாவில் அவர் பதிலளிக்காமல் தனது 52வது வயதில் திடீரென மாரடைப்பால் இறந்தார்.
தாய்லாந்தில்
விடுமுறையில் இருந்த வார்ன் கூட்டாளிகள் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு CPR செய்ய முயன்றதை காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.
தாய்லாந்து சர்வதேச மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக
அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய ஹீரோ "ஆபரேஷன் ஷ்ரெட்" என்று அவர் பெயரிட்டதை ஒன்றாக இணைத்து, ஜூலை மாதத்திற்குள் சிறந்த நிலைக்குத் திரும்பத் திட்டமிட்டார். வார்னே தனது எடையுடன் தொடர்ந்து பொதுவெளி சவாலாக ஈடுபட்டு 2020 இல் 14 கிலோ எடையைக் குறைத்து எடையைக் குறைத்தபோது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
கிரிக்கெட்டுக்கு என பெரிதாக மெனக்கெடாதவர் போலவே இருப்பார். பெரிய ரன் அப் கிடையாது. தற்கால லெக் ஸ்பின்னர்கள் போல ஒரே ஓவரில் மூன்று நான்கு variation எல்லாம் வார்னே பயன்படுத்தியது கிடையாது. இறங்கி வந்து பேட்டிங் வீரர் சிக்சர் அடித்தாலும் வார்னேவின் முகம் தோல்வியை ஒப்புக் கொள்ளாது. "அடுத்த பந்தில் நீ சிக்குவ பாரு" என்ற பாவனையில் தான் வார்னே இருப்பார். அவரது கிரிக்கெட்டின் கடைசி நாட்களில் எல்லாம் fitness கிலோ எவ்வளவு என குட்டித் தொப்பையுடன் காட்சி தந்தார்.
இதுவே சச்சினை எடுத்துக்கொள்ளுவோம். கடைசி காலம் வரை நல்ல fitness உடன் இருந்தார். களத்திற்குள் ஆடப்போவது கோவிலுக்கு போவது போல என்று கூறியுள்ளார். Fixing பிரச்சனை, கங்குலி-சேப்பல் பிரச்சனை என எதற்கும் பெரிதாக வாய் திறக்காத ஆள். அவரது கவனம் முழுக்க முழுக்க பேட்டிங்கில் மட்டும் தான் இருந்தது. கிரிக்கெட்டுக்காக பல தியாகங்களை செய்தவர். உணவுப் பழக்கத்தை மாற்றினார், குடும்பத்தாருடன் குறைவான நேரத்தை செலவழித்தார். தந்தையின் இறுதி காரியத்திற்கு கூட ஒரு நாள் தான் கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டார்.
வார்னே கதையே வேறு. கேப்டன், கீப்பர், கோச் என எல்லாரிடமும் முட்டிக் கொண்டவர். விளையாடும் காலம் முழுக்க கில்கிறிஸ்ட் உடன் நல்லுறவு கிடையாது. எனக்கு கோவில் மாதிரி என்று சச்சின் கூறிய ஆடுகளத்திற்குள் நின்று சிகரெட் புகைத்தவர் வார்னே. பீர் பாட்டில் உடன் தான் வார்னேவின் முக்கால்வாசி புகைப்படங்கள் இருக்கும். இந்தியாவில் IPL விளையாடும் போது தனது இணையருக்கு வளைத்து வளைத்து முத்தம் கொடுத்தவர். கிரிக்கெட் வீரர்களின் பெரிய கனவான உலகக்கோப்பைக்கு முன்னர் தேவையில்லா சிக்கலில் சிக்க ஓராண்டு தடை செய்யப்பட்டவர். தகாத SMS அனுப்பி வைஸ் கேப்டன்சியை இழந்தவர். புக்கிகளுடனும் தொடர்பு உண்டு.
ஆனால் இது எதுவுமே வார்னேவின் கிரிக்கெட்டை பாதிக்கவில்லை. ஓராண்டு தடை செய்யப்பட்டாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட்டில் மட்டும் 166 விக்கெட்டுகள் எடுக்க முடியும். கோச் முதல் கேப்டன் வரை அனைவரையும் பகைத்துக் கொண்டாலும் இவரால் அணியில் நீடிக்க முடியும். அஸ்னோட்கர், திரிவேதி, ஜடேஜா, யூசுஃப், கம்ரான் கான் என ஆட்களை வைத்து இவரால் கோப்பை வெல்லவும் முடியும். கிரிக்கெட்டை தெய்வமாக பார்க்காமல் தொழிலாக மட்டும் பார்த்த நபர் வார்னே. கிரிக்கெட் ஆடுகிறோம் என்பதற்காகவே சில காரியங்களை தனிமையில் தான் செய்ய வேண்டும் என்ற தடுப்புகள் எல்லாம் வார்னேவுக்கு ஒரு நாளும் இருந்ததே கிடையாது. கிரிக்கெட்டுக்காக வாழ்க்கையை கொஞ்சம் கூட தியாகம் செய்யாத ஆள்.
உழைத்து முடித்த பிறகு உல்லாசமாக இருந்தவர் கிடையாது இவர். கிரிக்கெட் ஆடும் போதும் சரி, ஆடி முடித்த பின்னும் சரி... கடைசி வரை உல்லாசமாகவே இருந்தார். கடந்த ஆண்டு கூட தனது 51 வயதில், மார்க்ரட் ராபியுடன் கிசுகிசுக்கப்படும் அளவிற்கு உல்லாசமான வாழ்க்கை. கடைசியில் கூட தாய்லாந்தில் மகிழ்ச்சியாகவே இருந்திருப்பார் நிச்சயம். ஏதோ ஒன்றுக்காக வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டே இருத்தல் வார்னின் அகாரதியிலேயே கிடையாது.
சச்சினும் சரி வார்னேவும் சரி... கிரிக்கெட்டில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் தான். ஆனால் சச்சின் முதல் பெஞ்ச் மாணவன். வார்னேவோ அடிக்கடி வகுப்புகளைக் கட் அடிக்கும் மாப்ள பெஞ்ச் மாணவன். வார்னே வாழ்ந்து முடித்துள்ளார். அவரைப் போல் சிகரெட் புகைக்கவோ, பீர் அடிக்கவோ சொல்லவில்லை. வாழ்வோம்... எல்லா சூழலிலும் நமக்கு பிடித்தது போல வாழுவோம். பிடித்த வாழ்க்கையை அனுதினமும் வாழ என்ன எல்லாம் தேவை? அதற்கு எப்படியெல்லாம் உழைக்க வேண்டும் என்று திட்டமிடுவோம். அதே சமயம் வாழும் வாழ்க்கை நம்மையோ நம்மை சுற்றி இருப்பவரையோ பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வார்னே போன்ற வாழ்க்கை எல்லாம் வரம். வரத்தை பயன்படுத்தி வாழ்ந்து முடித்துள்ளார் வார்னே.
0 Comments