மதுவினால் வீட்டில் அடிக்கடி சண்டை விரக்தியில் தற்கொலை முடிவில் பள்ளி மாணவர்கள்

    "அப்பா, நீங்க எவ்வளவு தான் குடித்துவிட்டு திட்டினாலும், சண்டை போட்டாலும் எனக்கு உங்க மேல வச்ச பாசம் குறையாது. ஏன்னா நீங்க என் அப்பா"

- மாணவர் தருண்.

    "அப்பா நீங்க இறந்தா என்ன கொள்ளி வைக்கக் கூடாதுனு சொல்லிட்டீங்க. ஆனா நான் அப்படி சொல்ல மாட்டேன். என் இறப்புக்கு வாங்க அப்பா. வந்து எனக்கு இறுதி சடங்கு செய்யுங்க. குடிச்சிட்டு பேசினேன் என்று சொல்லாதீங்க. உசுரும், வார்த்தையும் ஒன்று"- மாணவர் தருண்.

  தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு, மனித மரணங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மதுவே காரணமாக இருக்கிறது. மதுவால் மரணங்கள் தொடர்வது வேதனை அளிக்கிறது. இது, மாணவர் தருணோடு நிற்கப் போவதுமில்லை.

    நெல்லை வண்ணார்பேட்டை ரெயில்வே பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவர் தினேசை நீங்கள் மறந்து இருக்கலாம். தற்கொலை செய்த தினேஷ் சட்டைப்பையில் ஒரு கடிதம் வைத்திருந்தான்.

    "அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்து போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதால எனக்கு கொள்ளி வைக்காதே, மொட்டை போடாதே, நீ எனக்கு காரியம் பண்ணாத. சித்தப்பா மணி அப்பா தான் பண்ணனும். இது தான் என் ஆசை. அப்ப தான் என் ஆத்மா சாந்தி அடையும்.

 இனிமேலாவது இந்தியாவிலும் பிரதமரும், தமிழகத்தில் முதல்-அமைச்சரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்."

   என்று மாணவர் தினேஷ் கடைசியாக பொதுச் சமூகத்திடம் கடிதம் வாயிலாக பேசிச் சென்றான்.

  ஆவியாய் வர மாட்டான் என்ற நம்பிக்கையில் மதுக்கடைகள் தொடர்கின்றன. அரசே முன்னின்று நடத்துகிறது.

     தருணோ, தினேசோ ஆவியாய் வர மாட்டார்கள். ஆனால் அவர்களின் ஆன்மாக்கள் நம்மோடே உலாவுகின்றன.

  மதுக்கடையில் வரிசையில் நிற்பது, மது போதையில் விழுந்து கிடப்பவர்களின் வீடுகளிலும் தருண், தினேஷ்கள் இருக்கிறார்கள்.

இந்த மதுக்கடைகள் யாவும் செத்தொழியட்டும்!

Post a Comment

0 Comments