எளிமைக்கு எடுத்துக்காட்டாய், எட்டாத புகழ் கொண்ட,
எட்டுத் திக்கும் போற்றும் புதல்வனே..!
அறியாமையால் அடக்கி வைத்த வாழ்விலே
அறிவெண்ணும் ஒளி வீசி - எங்கள்
அண்டத்திலே கல்வி கொடி பறந்திட செய்தாய்..!!
பஞ்சத்தில் வாடும் வயிற்றுக்கு
பட்டம் என்ன? படிப்பு என்ன? என்ற
பாமர மக்கள் எங்களுக்கு,
"பகுத்தறிவு வேண்டும் என் தங்கங்களே", என்று
பசிக்கு சோறும், புத்திக்கு புத்தகமும் அளித்து,
பிழைக்கும் பிழைப்பிற்கு அடையாளம் காட்டி,
பள்ளி என்னும் திருக்கோவில் காட்டி,
கல்விக் கண் திறந்தாயே கர்மவீரா.
நீ விதைத்த விதையிலே, நீண்டு வாழும் எங்கள் வாழ்க்கை
நீ பதித்து சென்ற சுவடுகளிலேயே வாழ்ந்து வருகிறோம்.
காலம் தான் பல ஓடியும், காமரசா உன் பெயர் மறவாதே..!
கண் காணும் எழுத்தின் பின்னால் - உன்
கண்களே எம்மை வழி நடத்துகிறது..
கைகள் ஏந்திய புத்தகம் இன்று - எங்கள்
கை சேர வியாபாரமாய் போனதே..!
அரசியலும், அக்கிரமும் சேர்ந்து
கல்விக்கு விலசாமின்றி போனதே..!!
தூணாய் நிற்க வைத்து நீ சென்ற உன் நம்பிக்கை
துருபிடித்ததுதான் போகுதே நீ சென்ற வழியிலே..
நாரகவாதிகளும், நாகரீகமும் சேர்ந்து, நான்கு புறமும் ஆட்சி ஆள,
துலாபாரம் தான் ஏந்தி போனதே நீ கண்ட புதையல்...
தாங்கிப் பிடிக்க தெம்பிருந்தும், தர்மம் தான் மனதில் இருந்தும்,
நீ கண்ட வெளிச்சம் ஏனோ, அலையாட தொடங்கியதே..!
நீ ஆண்ட மண்ணிலே, நிறம் மாறாத பண்பிலே,
கருமேகம் சூழ்ந்த மனதிலே, கவலை ததும்பும் விழியிலே,
கல்வி கொடி ஏந்திய கம்பத்தை, கைபிடித்து தாங்கி நிற்க
நீயே மீண்டும் வர வேண்டும்..!!
தி. பிரபாகரன்
0 Comments