என்று தீரும் கெயில் எரி காற்று குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் ??!!
மீண்டும் தீவிர போராட்டம் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் செய்து வந்த திட்டப்பணிகள் நேற்று (11-04-2021) கெயில்/ IDPL பாதிக்கப்பட்ட விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
கேரளாவின் ஒரு பகுதியிலும், கர்நாடகாவிலும், குஜராத்திலும் சாலையோரம் எரி காற்றுக் குழாய்களை அமைக்கும் கெயில் நிறுவனம் தமிழகத்தில் மட்டும் விளை நிலங்களில் மட்டுமே அமைப்போம் என்று தொடர்ந்து கடும் போக்கை கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் மீண்டும் விவசாய நிலங்கள் வழியாக திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி கொடுத்து அம்மாவின் கொள்கை பிரகடனத்தை மாற்றியமைத்து விவசாயிகளுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டார்.
இதனால் கெயில் நிறுவனம் திருப்பூரிலும், தர்மபுரியிலும் மீண்டும் கிடங்குகளை அமைத்து குழாய்களை இறக்கி வைப்பதற்கு தயாராகி வந்தது, திருப்பூரில் குழாய்களை இறக்கி வைக்க எடுத்த முயற்சியை கெயில்/ IDPL திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒற்றுமையால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்குள்ள விவசாயிகளை மிரட்டி திட்டப்பணிகளை மிகவும் நயவஞ்சகமாக செய்து வந்தது.
நமது இயக்கத்தின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் அவர்கள் தலைமையில் ஒரு குழு சென்று இந்த பணிகள் நடைபெறுவதை கண்டறிந்து அந்த தகவலின் பேரில் இன்று திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் 70க்கும் மேற்பட்டோர் நேற்று (11-04-2021) நடைபெற்ற திட்டப் பணிகளை பார்வையிட்ட பின்பு திட்டப்பணிகளை அங்குள்ள நில உரிமையாளர்கள் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டு இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டது.
அடுத்த கட்டமாக வருகிற வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் வரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கெயில் மற்றும் IDPL விவசாயிகள் இணைந்து முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டது
இப்படிக்கு
கெயில் எரிகாற்று குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம்பாரத் பெட்ரோலியத்தின் IDPL எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம்






0 Comments