வாழ்க்கை இனிமையாக இருக்கும் - படித்ததில் பிடித்தது

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தனியாக ஊர்சுற்றுவதை செய்து பாருங்கள்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

வெளியூர் எங்கும் போக வேண்டாம். நீங்கள் இருக்கும் ஊரையே அப்படியே பராக்கு பார்த்துக் கொண்டு, பார்த்த உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்.

எனக்கெல்லாம் அது மிகப்பெரிய ஸ்டிரஸ் பஸ்டராக இருக்கும்.


தனியே ஒரு சினிமா பார்த்து, தனியே எங்காவது சாப்பிட்டு, தனியே வேடிக்கைப் பார்த்து, தனியே டீ சாப்பிட்டுக் கொண்டு, தனியே கண்ணில் பட்ட எதாவது பஸ்ஸில் ஏறி நகரத்தைச் சுற்றிக் கொண்டு, தனியே எதாவது லைப்ரரி சென்று புத்தகம் படித்துவிட்டு, கண்ணில் மாட்டியவர்களிடம் பேச்சுக் கொடுத்து விட்டு இருப்பது ஒரு சுகம்.

சில சமயம் பாரீஸ் கார்னர் கடைவீதிகளுக்குப் போவேன். அங்குள்ள நெருக்கடியான பூக்கடை சந்தில் தொடங்கி ஒவ்வொரு சந்தாக போய்விட்டு வருவேன்.

எலக்டிரானிக்ஸ் பொருட்கள் விற்கும் இடமான ரிச்சி ஸ்டிரீட்டும் எனக்குப் பிடிக்கும்.

நான் மதிய உணவு எங்கே சாப்பிடப் போகிறேன் என்று எனக்கே தெரியாத அந்த சஸ்பென்ஸ் எனக்குப் பிடிக்கும்.

சில சமயம் வண்டிகடைகள், சில சமயம் பெரிய உணவகங்கள்.

ஒருமுறை ஒரு டாஸ்மாக் கடை முன்னே நின்று கொண்டு அங்கே சைட் டிஷ் விற்கும் பாட்டி என்ன என்னல்லாம் பொருட்கள் வைத்திருக்கிறார் என்று பார்த்தேன்.

நெல்லிக்காய், சீனிக்கிழங்கு, மாங்காய், பெரிய எலந்தப்பழம் என்று அவர் வைத்திருந்த அனைத்துப் பொருட்களையும் மனப்பாடம் செய்துவிட்டுதான் அந்த இடத்தை விட்டு சென்றேன். சுமார் இரண்டு மணி நேரம் அதில் போயிருந்தது.

புரசைவாக்கம் ஒட்டேரி பிரிக்கிளின் ரோட்டில் நடப்பது எனக்குப் பிடித்த பொழுது போக்கு.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களின் நெருக்கடியான வாழ்க்கைப் போராட்டத்தை அங்கே கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒரு பொதுக்கழிப்படமருகே அமர்ந்து ஒரு பெண் திருப்தியாக அன்றைய காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

பெண் உடல் ஆண் உடல் மறைப்பது மிகப்பெரிய கவனமாக அங்கே நடக்காது. ரோட்டுப் பக்கத்திலேயே துணி துவைத்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டு (இடு)சுடுகாடுகள் இருக்கும். மக்கள் அருவருப்பாக பயந்து ஒதுங்கும் சாவு மலர்களை ஆடுகள் விருப்பமாய் உண்டு கொண்டிருக்கும்.


அந்த இடத்துக்கு சம்பந்தமில்லாமல் பெரிய கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடமிருக்கும்.

அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வருவதற்கு முன்னால் அவர்கள் அனைவரையும் இயேசுவின் சொர்க்கத்துக்கு கூட்டிச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் உயர்ந்த(?) நோக்கமாக இருக்கும் என்பது படியான கட்டிடம் அது.

அந்த மூன்று கிலோமீட்டர்களுக்குள் மூன்று கிறிஸ்தவ சிறுகோவில்கள், ஏழு இந்து சிறுகோவில்கள் இருக்கும்.

சில சமயம் திநகர் சென்று வேடிக்கைப் பார்ப்பேன்.

 மக்கள் கண்கள் விரிய விரிய பர்சேஸ் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

சமீபத்தில் அங்குள்ள தேங்காய் தவினை வாங்கி சாப்பிட்டேன். ருசிதான்.

சென்னை வந்ததில் இருந்து அதைப் பார்த்து வருகிறேன். அது ஊசி போட்டு தேங்காயில் அப்படி தவினை வரவைப்பார்கள் என்று யாரோ சொல்ல, அது என் மனதில் இறங்கி விட்டது. 

அதனாலேயே சென்னை வந்ததில் இருந்து இருபது வருடங்களாக அதைப் பார்த்தாலும் வாங்கித் தின்பதில்லை. 

சமீபத்தில் “போங்கடா நீங்களும் உங்க ஆர்கானிக் பிரச்சாரம் மொக்கைகளும்” என்று வாங்கி சாப்பிட்டேன். செம ருசி.

இப்போது செல்போன் வந்து விட்டது. நடுவில் நண்பர்களிடத்தில் இருந்தோ அல்லது நாமோ போன் செய்து பேசிவிடுவோம்.

செல்போன் இல்லாத சமயத்தில் இப்படி தனியே சுற்றும் போது செமையாக இருக்கும்.

காலை எட்டரை மணிக்கு வெளியே கிளம்ப்பும் நாம் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பும் வரை அமைதியாக இருப்போம். அதுவே பெரிய தியானம்தானே.

சில சமயம் நாமே நமக்குள் வாயால் முணுமுணுத்துக் கொள்ளும் அழகும் நடக்கும். 

நான் பாலிடெக்னிக் படிக்கும் போது தெருவில் இன்னொரு பையன் வேறு ஒரு பாலிடெக்னிக்கில் படித்தான்.

அவர் ”த்தா ம்மாள டைப்”. எப்போதும் கெட்ட வார்த்தைப் போட்டுக் கொண்டு ப்ளிச் ப்ளிச் என்று துப்பிக் கொண்டு இருப்பான்.

தெரு முனையில் நின்று சில நேரம் என்னிடம் பேசுவான்.

ஒருநாள் காலை நான் ரெட்டையேரி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். அவனும் வந்தான். 

காலேஜ் போற போல என்றேன்.

அவன் நான் காலேஜ் போகல மச்சி வண்டலூர் சூ போறேன் நீ வறியா என்றான்.

நானும் பார்த்தேன். எனக்கு நிறைய அட்டெண்டன்ஸ் இருந்தது. 

அடுத்து எனக்கு எப்பவுமே ஒழுக்கத்தில் நம்பிக்கை கிடையாது.

சரி போவோம் என்று அவனுடன் வண்டலூர் சூ சென்றேன்.

அவன் கல்லூரிக்குச் செல்லாமல் அடிக்கடி அங்கு செல்வேன் என்று சொன்னான். நான் கேட்டு வைத்துக் கொண்டேன்.

சூ உள்ளே சென்றதும் குழந்தை மாதிரி ஆகிப்போனான் அந்த “த்தா ம்மாள” நண்பன்.

அதிலும் பறவைகளை துள்ளிக் குதித்து ரசித்தான்.

சிறுகுழந்தையாகவே ஆகி “மச்சி அங்கப் பாரேன் பாரேன்” என்றான். எனக்கோ அவன் அப்படி சிலிர்ப்பது வெட்கமாய் இருந்தது. 
சரி சரி என்று கேட்டு வைத்துக் கொண்டேன். 

வேடிக்கைப் பார்ப்பது அவனை அப்படி மாற்றியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

வேடிக்கை பார்க்க என்றே ஒருநாளை ஒதுக்குங்கள் என்று சொல்ல வருகிறேன்.

அன்று யாரையும் சேர்காதீர்கள். தனியாக வேடிக்கை பாருங்கள்.

அது உங்களுக்கு சொல்ல முடியாத ரிலாக்சைக் கொடுக்கும். அது மிகச்சிறந்த மெடிட்டேசன்.

அதிலும் ரொட்டீனாக வேடிக்கைப் பார்க்காதீர்கள்.

உங்கள் புரோகிராம் என்னவென்று உங்களுக்கே தெரியக்கூடாது.

பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஸ்டாப்பில் ஒரு போஸ்டரைப் பாக்கிறீர்கள். ஏதோ ஒரு கண்காட்சி அந்த இடத்தில் நடக்கிறது என்று போஸ்டரைப் பாக்கிறீர்கள்.

டபகென்று அங்கே குதித்து விட வேண்டும். அந்தக் கண்காட்சிக்கு போக நடக்க வேண்டும். 

அப்படி நடந்து கொண்டிருக்கும் போதே அங்கே ஒரு தியேட்டர் வருகிறது. கண்காட்சியை விட்டு படம் பார்க்கலாம் என்று மனம் சொல்லும். 

உடனே படத்துக்குள் போய் விட வேண்டும்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே போரடிக்கிறது. கொடுத்தக் காசுக்காக அங்கேயே இருந்து கொண்டிருக்க வேண்டியதில்லை.
அங்கிருந்து வெளியேறலாம்.

அங்குள்ள மக்கள் யாரிடமாவது இங்க நல்ல சாப்பாடு எங்க கிடைக்கும், நல்ல டீ எங்க கிடைக்கும், நல்ல கேக், பன் பட்டர் ஜாம் எங்கே இருக்கும் என்று கேட்கலாம். 

அவர்கள் உதவுவார்கள். 

போய் தின்ன வேண்டும்.

இப்படி ஒருநாள் செய்தால் உங்கள் உடலும் மனதும் சொல்ல முடியாத புத்துணர்ச்சி பெரும்.

பெண்களும் இதைச் செய்ய வேண்டும். இந்த ”ளும்” என்பது பொதுவெளி எங்களுக்கானதில்லை என்று சலித்து ஒதுங்கும் பெண்களுக்காக பொதுஜனம் பார்க்கிறது என்பெதெல்லாம் ஒரு பேச்சில்லை.

முயன்றால் முடியாதது இல்லை.

இப்படியெல்லாம் செய்யும் பட்சத்தில் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சமீபத்தில் ஏதோ திரைப்படம் பார்த்தேன்.

அதில் இந்த வாழ்க்கைதான் சொர்க்கம் என்று ஹீரோ சொல்வான். அப்படித்தான் நாமும் நம்ப வேண்டும்.

அந்த சொர்க்கத்தில் அந்த அந்த விநாடி வாழ வேண்டுமென்றால் இந்த திடீர் ஊர் சுற்றுதல் பழக்கம் நல்லதொரு பிடிப்பைக் கொடுக்கும்.

தினமும் காலையில் தின்று, ஆபீஸ் சென்று, அல்லது குடும்பத்தோடு இருந்து சிரித்து, மாலை டீக் குடித்து, இரவானால் உடலுறவு கொண்டு தூங்கும் ரொட்டீனை விட்டு ஒருநாள் வெளியே வந்தால் அது கொடுக்கும் புத்துணர்வே தனிதான்.

மனமிருந்தால் உள்ளூரிலேயே மகிழ்ச்சியாக இருக்கலாம்

- Vijay Bhasky

Post a Comment

0 Comments