2019ம் ஆண்டின் ஜூலை மாதம் அது. 'கஃபே காபிடே' நிறுவனர் சித்தார்த்தா மங்களூருவில் உள்ள ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட செய்தி காட்டுத்தீ போல பரவியது. அனைத்து ஊடகங்களிலும் அன்று மட்டுமல்ல, அந்த வாரம் முழுவதும் அது தான் தலைப்புச் செய்தி. சித்தார்த்தா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என அலச ஆரம்பித்தனர். கஃபே காபிடே என்ற சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வர்த்தக சாம்ராஜியம் உருவாக்கம் :
வெளிநாடுகளுக்கு ஒரு ஸ்டார் பக்ஸ் என்றால், இந்தியாவுக்கு கஃபே காபிடே. சுமார், 3,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள், நாடெங்கும் 1,600 காபி டே கடைகள் என இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனராக வலம்வந்தவர் வி.ஜி.சித்தார்த்தா. அந்த அளவுக்கு பிரபலமான இந்த நிறுவனத்தின் முதல் கடை(கஃபே) 1996-ம் ஆண்டு பெங்களூரில் திறக்கப்பட்டது. தொழில் ரீதியிலான சந்திப்புகள், வார இறுதி நாள்களில் காபி பிரியர்கள் நண்பர்களின் அரட்டையுடன் காபி கொட்டையில் இருந்து உடனடியாக தயாரான ஒரு நல்ல காஃபியையை கொடுப்பதின் நோக்கதுடன் உருவானது இந்த காபி டே. அந்நாளில் சாதாரணமாக காபி விலை ரூ.5 ஆனால் காபி டேயில் ஒரு கோப்பை காபியின் விலை ரூ.25.
தொழில் ரீதியிலான சந்திப்புகள், வார இறுதி நாள்களில் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க மிகச் சிறந்த இடமாக காபி டே மாறியதுதான் அதன் வெற்றியின் ரகசியம். காபிடேவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தை மறுக்க முடியாது. இதையடுத்து இந்தியாவின் மூலை முடுக்களில் காபிடே கடைகள் திறக்கப்பட்டன.
15 ஆண்டுகளில் அதாவது 2011-ம் ஆண்டு வாக்கில், நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை வைத்திருக்கும் ஒரு பெரிய வணிகக் குழுவாக வளர்ந்தது.
சித்தார்த் தற்கொலை :
காற்று எப்படி புயலாக மாறுமோ அப்படி, ஒரு கட்டத்தில் கிளைகள் உயர்வதை போல கடன்களும் உயர தொடங்கின. இந்த நிலைமையில் தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சித்தார்த்தாவே கலங்கிப் போகும் அளவுக்கு நிறுவன கடன் சுமை கை மீறிப்போனது. கடன் சுமை ஒருபுறம், முதலீட்டாளர்களின் நெருக்குதல் மறுபுறம் அனைத்துக்கும் மேலாக வருமான வரித்துறையினரின் கெடுபிடிகள் என பன்முனைத் தாக்குதலுக்கு உள்ளானர் சித்தார்த்தா. இந்த நிலையில்தான் கடன் பாக்கியை சமாளிக்க முடியாமல் 2019ம் ஆண்டு விஜி சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார்.
கஃபே காபி டே சிஇஓவாக பொறுப்பேற்ற மாளவிகா
கஃபே காபி டே நிறுவனம்,சித்தார்த்தின் மரணத்துக்குப் பின் திண்டாடிப் போனது. என்ன செய்வது என குடும்பமே தத்தளித்துக் கொண்டிருந்த போதுதான் அந்நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா.
சித்தார்த்தா இறப்புக்குப்பிறகு கஃபே காபிடேவின் வரலாறு இத்தோடு முடிந்துவிட்டது என எண்ணிக்கொண்டிருந்தவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றி எழுதினார் மாளவிகா. கணவரின் இறப்புக்கு பிறகு நிறுவனத்தை அவர் தூக்கி நிறுத்திய விதம் அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மாளவிகாவை பொறுத்தவரை 'பார்ன் வித் சில்வர் ஸ்பூன்' என்பதற்கு ஏற்ப, செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் தான் மாளவிகா. கவலைகளின் ரேகைகளை படராத அவரது வாழ்வில், கணவரின் இறப்புக்கு பிறகு அடுக்கடுக்கான சவால்கள் எதிர்நோக்கியிருந்தன.
சவால்களுக்கு இடையில் கடன்சுமை குறைப்பு :
சவால்கள் என்றால், கொஞ்ச நஞ்சமல்ல. ஒருபுறம் கணவரின் இறப்பு. மறுபுறம் 7,000 கோடி ரூபாய் கடன்; நிறுவனத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை, தவிர, தனது இரண்டு குழந்தைகளை கரை சேர்க்க வேண்டும் என சோதனை சுழன்றி அடித்தது. நிறுவனத்தை மூடிவிட்டால் தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள் என்பதும், கணவரின் கனவு நிறுவனத்தை மூடக்கூடாது என்ற வைராக்கியமும் அவரை முன்னேறிச்செல்ல உந்தியது. சிறிதும் அசராமல் தொடர்ந்து உழைத்து பிரச்சினைகளை உணர்ந்து அதற்கு நிதானமாக தீர்வு கண்டதன் மூலம் கடன் சுமையை ரூ.7,200 கோடியிலிருந்து ரூ.1,731 கோடியாகக் குறைத்துள்ளார்.
ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டுதல் :
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடனேயே தனது பணியாளர்கள் 25 ஆயிரம் பேருக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக கடிதம் எழுதிய மாளவிகா, அதில் நிறுவனத்தின் கடன் சுமையை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படியே நிறுவனத்தின் சில சொத்துகளை விற்றும், சில முதலீடுகளை மேற்கொண்டதன் மூலம் ஊழியர்களிடையே நம்பிக்கையை விதைத்தார்.
கடனை குறைக்க நடவடிக்கைகள் :
கொரானா பெருந்தொற்று காலத்தில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற போதிலும், கடந்த 12 மாதங்களில் பல்வேறு புதிய முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். வருமானத்தை அதிகரிக்க காபியின் விலையை அவர் உயர்த்தவேயில்லை. மாறாக வருமானம் தராத ரெஸ்டாரென்ட்களை அவர் மூடினார்.
கொரானா பெருந்தொற்று காலத்தில் உரிய வழிமுறைகளை முறையாக பின்பற்றி ரெஸ்டாரென்ட்கள் செயல்படுவதில் அவர் உறுதியாக இருந்தார். இப்போது நாடு முழுவதும் 572 காபி டே ரெஸ்டாரென்ட்கள் லாபகரமாக செயல்படுகின்றன. இது தவிர 36 ஆயிரம் காபி விநியோகிக்கும் இயந்திரங்கள் பல்வேறு நிறுவனங்களில் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக உயர் ரக அராபிகா காபிக் கொட்டை ஏற்றுமதியிலும் அவர் கவனம்செலுத்தினார். 20ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளையும் இந்த காபி ரகத்துக்கு வெளிநாடுகளிலும் மிகச் சிறந்த வரவேற்பு கிட்டியது.
இன்று காபி டே- நிறுவனத்தின் புதிய அடையாளமாக திகழ்கிறார் மாளவிகா. மிகவும் பிரபலமான காபி டே-வுக்கு புதிய முகம், அது வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்த பெண்மணியின் வெற்றித் திருமுகம். பலருக்கு உத்வேகம் அளிக்கும் இரும்புப் பெண்மணியாகத் திகழும் மாளவிகாவை பாராட்ட வார்த்தைகள் ஏது!
0 Comments