கோவையில் பயப்படாமல், பதற்றப்படாமல் தன் நண்பரை காப்பாற்றிய நடத்துனர் - சிறப்பான சம்பவம்


கடந்த புதன்கிழமை 30.03.2022 வழக்கம் போல பயணிகளை கோவையில் ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    பேருந்தை ராஜேஷ்குமார் என்கின்ற ஓட்டுனர் இயக்குகிறார். நடத்துனராக தமிழ்செல்வன் என்பவர் கடமையே கண்ணாக பணியாற்றி கொண்டிருக்கிறார். இருவரும் சிறந்த நண்பர்கள். நீண்டநாட்களாக இதே வழித்தடத்தில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள்.

    பேருந்து நிறைந்த கூட்டத்தோடு பெரியநாயக்கன் பாளையம் தாண்டி சீராக சென்று கொண்டிருக்கிறது. வண்ணாங்கோயிலை நெருங்கியதும் வண்டியை ஓட்டுனர் நிறுத்துகிறார். அப்போது அவரிடம் ஒரு பதட்டம் தெரிகிறது..
முகமெல்லாம் வேர்வை..

    உடனே நடத்துனர் தமிழ் செல்வனை கூப்பிட்டு அண்ணா. ஏனோ நெஞ்சு வலிக்கிறது. படபடப்பாக இருக்கிறது. இடது தோள்பட்டை வலிக்கிறது என்கிறார்..

    நிலைமையின் தீவிரத்தை நடத்துனர் புரிந்து கொள்கிறார். பதட்டப்படவில்லை, பயப்படவில்லை. அதே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சக ஓட்டுனர் ஒருவரை அழைத்து அண்ணா வண்டியை கவனித்து கொள்ளுங்கள். வரும் அடுத்த பேருந்தில் பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்து விடுங்கள் நான் தலைமை அலுவலகத்தில் சொல்லி விடுகிறேன் எனக்கூறி விட்டு உடனடியாக தன் சகதோழரை அருகில் உள்ள DJ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறார்.

    அங்குள்ள டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சிவியர் ஹார்ட் அட்டாக் என கூறி முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பரிந்துரைக்கிறார்கள்.

    நடத்துனர் தமிழ்செல்வன் அவர்கள் அப்போதும் பதட்டப்படாமல். பயப்படாமல். நண்பனை அங்குள்ள ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு.. கோவை. PSG. மருத்துவமனைக்கு அழைத்தச்செல்கிறார்.

  நடத்துனர் ஆம்புலன்ஸில் செல்லும் போதே PSG மருத்துவமனையில் பணியாற்றும் தன்மகள் தீபிகாவிடம் நிலைமையைச் சொல்லி விடுகிறார். மகள் தீபிகா தீவிரத்தின் தன்மை உணர்ந்து உரிய ஏற்பாடுகளை செய்து வைத்து விடுகிறார் அடுத்த அரைமணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைகிறது.

ICU அழைத்துச் செல்கிறார்கள் பரிசோதித்து விட்டு உடனடியாக இவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இத்தனை லட்சம் செலவாகும் என்கிறார்கள். உடனடியாக ரூ.ஐம்பதாயிரம் கட்டுங்கள் என்கிறார்கள்.

சற்றும் யோசிக்காமல் தன்னுடைய கிரெடிட் கார்டு மூலம் பணத்தை கட்டிவிடுகிறார் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.. இவரே தைரியமாக உரிய படிவத்தில் கையொப்பமிட்டு தந்து விடுகிறார் .உடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது..மருத்துவமனையில் இருக்கும்போதே இரண்டாவதாக மீண்டும் ஒரு அட்டாக வந்து விடுகிறது காப்பாற்றப்படுகிறார்..

அதன்பின் சற்றே ஆசுவாசமாக ராஜேஸ் குமார் அவர்களின் வீட்டிற்கு கூப்பிட்டு சொல்கிறார். இந்த நடத்தனரின் பதட்டப்படாத செயலால் மனிதாபிமானத்தால் ஒரு உயிர் காப்பாற்றப்படுகிறது யாருக்கு வரும் இந்த தைரியமும் உதவும் மனப்பாண்பும் ????.

வண்டியை பயணிகளோடு நடுரோட்டில் நிறுத்திவிட்டுச்செல்கிறோமே இதனால் நமது வேலைக்கு பங்கம் வந்து விடுமோ என்றவர் அஞ்சவில்லை நண்பனின் துடிப்பைக்கண்டு பதட்டப்படவில்லை அமைதியாக சிறிதும் பயப்படாமல், பதட்டப்படாமல் உரிய ஏற்பாடுகளை செய்து உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து தன்னுடைய பணத்தை கட்டி தன் சக தோழரை காப்பாற்றிய நடத்துனர் தமிழ்ச்செல்வனின் செயல் போற்றப்பட வேண்டிய செயல். வணங்கப்பட வேண்டிய செயல். தெய்வம் சிலசமயங்களில் இப்படி மனித உருவிலும் வந்து உதவுமோ என ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த மனிதநேய பண்பாளரை நண்பர்களே வாழ்த்துங்கள்!! வாழ்த்துங்கள் !!
💐💐💐

Post a Comment

0 Comments