அட்டைகள் ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஒட்டுண்ணிப் புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளையப் புழு (annelid) ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் செயல்படுகின்றன. ஈரப்பதம் நிறைந்த இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள், உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches).
வாழிடம்
அட்டை குளம் குட்டை ஆறு முதலிய நன்னீர் நிலைகளிலும், கடலிலும், ஈரத்தரை மீதும் வாழும் ஒருவகைப் புழு. அன்னெலிடா (Annelida) என்னும் வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அட்டையில் பல சாதிகளுண்டு. அவை பலவகையான வாழ்க்கை முறையுள்ளவை. சில அட்டைகள் மண்புழு, பூச்சிகளின் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்கின்றன.
அசுத்தங்களை உண்டு துப்புரவாளர்கள் போல அவற்றைச் சில நீக்குகின்றன. பெரும்பாலான வகைகள் மற்றப் பிராணிகளின் உடம்பில் எப்போதும் அல்லது சிற்சில சமயங்களில் ஒட்டிக் கொண்டு அவற்றின் உடலிலுள்ள இரத்தத்தையோ சாற்றையோ உறிஞ்சி ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அட்டை நீரில் நன்றாக நீந்தும். அதன் உடலை மேலும் கீழுமாகச் செங்குத்தாக அலைபோல அசைத்து நீந்திச் செல்லும். நாம் கைவிரல்களால் ஓட்டை அல்லது சாண் அளப்பதுபோலத் தரையில் அட்டை ஊர்ந்து செல்லும் இயல்புடையன ஆகும்.
உடலமைப்பு
அட்டையின் உடல் சற்றுத் தட்டையாக இருக்கும். தோலின் மேலே குறுக்கே உடல்நெடுக மடிப்பு மடிப்பாக இருக்கும். மருத்துவத்தில் உபயோகப்படும் சாதாரண அட்டையின் உடலில் இந்தத் தோல் மடிப்புக்கள் நூற்றுக்குமேல் இருக்கும். இதன் உடல் 33 வளையங்களால் ஆனது. 26 வளையங்களை எண்ணலாம். பொதுவாக ஒரு உடல் வளையத்துக்கு 5 தோல் மடிப்புக்கள் இருக்கின்றன.முன்பக்கத்தில் 5 ஜதைக் கண்கள் இருக்கின்றன. அட்டையின் முன்முனையிலும் பின் முனையிலும் உறிஞ்சிகள் (Suckers) என்னும் உறுப்புக்கள் உண்டு. இவை வட்டமான அல்லது நீளவட்டமான சற்றுக் குழிந்த கிண்ணம் போன்றவை. இவற்றைத் தட்டையாக அமுக்கி ஓரத்தை அழுத்திக் கொண்டே நடுவிலுள்ள பாகத்தைச் சற்று உயர்த்துவதால் இவற்றிற்குள்ளே அழுத்தம் குறைவான ஓர் இடம் உண்டாகிறது.
இதன்மேல் அழுத்தம் மிகுந்திருப்பதால் இந்த உறிஞ்சி இடப்பட்ட இடத்திற்குக் கெட்டியாக ஒட்டிக்கொள்கிறது. உறிஞ்சியை விடுவிக்க வேண்டுமானால் ஓரத்தைச் சற்றுத் தூக்கினால் போதும்; உள்ளும் புறமும் அழுத்தம் ஒன்றாகி உறிஞ்சியின் பிடிப்பு விட்டுவிடும். முன்னுறிஞ்சியின் நடுவில் வாய் இருக்கிறது. அதில் மூன்று வளைவான தகடு போன்ற தாடைகள் உண்டு. ஒவ்வொரு தாடையின் விளிம்பிலும் கூரான பற்கள் உண்டு. இவையெல்லாம் கைடின் (Chitin) என்னும் பொருளாலானவை.
உறிஞ்சியால் அழுத்திப் பற்றிக் கொண்டு இந்தத் தாடைகளை முன்னும் பின்னும் அசைவித்து அட்டை தான் ஒட்டிக்கொண்டிருக்கும் பிராணியின் தோலிலே முக்கோண வடிவான ஒரு காயம் உண்டாக்குகிறது. அதன் வழியாக அட்டை இரத்தத்தை உறிஞ்சும். அட்டையின் உமிழ்நீர் அதோடு கலக்கும். அந்த உமிழ்நீரில் ஹிருடின் என்னும் ஒரு சத்து இருக்கிறது. அது இரத்தம் உறைந்து போகாமல் திரவமாகவே இருக்கச் செய்கிறது.
கருப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த அட்டைகள், வளையங்கள் கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து நீளும் தன்மையுடன் மிருதுவான உடலமைப்பைக் கொண்டிருக்கும். இவை பாலூட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி உணவாகக் கொள்ளும். மனித ரத்தத்தையும் விட்டுவைப்பதில்லை. இந்த அட்டைகள் நம்மைக் கடிக்கும்போது வலி ஏதும் தெரியாதிருக்க இதன் எச்சிலில் இருந்து சுரக்கும் ஒருவித ரசாயனம், கடிக்கின்ற இடத்தை மரத்துப் போகச் செய்துவிடும்.
அதனால் அட்டை நம்மைக் கடிக்கும்போது நமக்கு எவ்வித வலியும் தெரியாது. அது கடித்து நம் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி முடித்தவுடன்தான், உடலில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு ஏற்படும். உடனே பயத்தில் அதை அகற்ற முற்படுவோம். அதுபோன்ற நேரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். வெறும் கையால் அட்டையைப் பிடித்து இழுத்துவிட முடியும்.
அதைவிடவும் பாதுகாப்பான முறைகள் பல உண்டு. குறிப்பாக வனத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், வனங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளும் அறிவியலாளர்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவோர் இதுபோன்ற நேரத்தில், அட்டை கடித்த இடத்தில் உப்பு, டெட்டால், சோப்பு, எலுமிச்சைச் சாறு, மூக்குப்பொடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தடவினால், அட்டை தானே கீழே விழுந்துவிடும்.
உடம்பில் கடித்த அட்டையை இப்படி அகற்றியவுடன், கடித்த இடத்தை சோப்பு போட்டு நன்கு கழுவி, அங்கே ஒரு band-aidயை ஓட்டிவிடலாம். பொதுவாக அட்டை கடித்த இடத்தில் ஏற்பட்ட புண் ஆறும்போது அரிப்பு ஏற்படும். அதுபோன்ற நேரத்தில் அந்த இடத்தில் சொரியக்கூடாது. சிலருக்கு அட்டை கடியால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோன்ற நபர்கள் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது நல்லது.
அட்டையின் தீனிப்பையில் (Crop) ஜதைஜதையாகப் பல பைகள் இருக்கின்றன. சாதாரண அட்டையில் 11 ஜதைகள் இருக்கின்றன. இவற்றில் இரத்தம் சேகரித்து வைக்கப்படுகிறது. அட்டை ஒரு தடவை நன்றாக இரத்தம் குடித்துவிட்டால் 10, 12 மாதம்கூட உணவின்றி உயிர் வாழ்ந்திருக்கும்.
அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது. இந்த நன்னீர் அட்டைகளின் உமிழ்நீரில் இருந்து சுரக்கும் இருடின் என்னும் நொதியானது பாலூட்டிகளின் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் அட்டைகள் பாலூட்டிகளின் குருதியை எளிதாக உறிஞ்சிக் குடிக்கின்றன.
சிகிச்சை தேவை
அட்டை கடியை எந்தச் சிகிச்சையும் இன்றி அப்படியே விட்டுவிட்டால், கடித்த புண் ஆறுவதற்குச் சில ஆண்டுகள்கூட ஆகலாம். அது மட்டுமல்லாமல் கடித்த இடத்தில் ஏற்பட்ட தழும்பு எளிதில் மறையாது. அதனால்தான் வனத்துறை அலுவலர்கள் இதுபோன்ற காட்டுப் பகுதிகளுக்குச் செல்லும்போது, Hunter’s shoe என்று சொல்லப்படக்கூடிய shoeவை அணிவதுடன், அதற்கும் மேலே காக்கி நிறத்தில் பட்டியையும் இறுக்கமாகக் கட்டிக்கொள்வார்கள் (இது 4 அங்குல அகலமும், 2 அடி நீளமும் கொண்ட ஒரு தடிமனான காக்கி துணி). இதை அணிவதால், அட்டைகள் உடல் பகுதியை அணுக முடியாது. அப்படி ஒருவேளை அட்டைகள் கால் மீது ஏற முற்பட்டாலும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளமுடியும்.இந்த அட்டைகள் கேரள மாநிலத்தில் ஒரு சில நோய்களைக் குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில வெளிநாடுகளில் முதுமை யடைவதைத் தடுப்பதற்காகவும், ‘வெரிகோஸ் வெய்ன்’ என்று சொல்லப்படும் நரம்பு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தவும் இந்த அட்டைகளை மருத்துவர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

0 Comments