என் அழகை ரசித்தபடி மக்கள் இன்பப் பயணம் மேற்கொள்வது எப்போது? - கிழக்குக் கடற்கரை சாலை - ஈ.சி.ஆர் (East Coast Road)

என் அழகை ரசித்தபடி மக்கள் இன்பப் பயணம் மேற்கொள்வது எப்போது?

எனது பெயர் கிழக்குக் கடற்கரை சாலை...

உங்களில் பலருக்கும் ஈ.சி.ஆர் (East Coast Road) என்றால் தான் தெரியும். இப்பொழுது பெயர் மாற்றம் செய்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை தமிழ்நாடு திராவிட முன்னேற்ற கழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது 


இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு வழித்தடம் நான் தான்.

ஆனால், என் மீது பயணம் செய்ய எவரும் விரும்புவதில்லை. காரணம்... இயற்கை அழகை ரசிப்பதை விட இந்த உலகத்தில் வாழ்வதற்கு உத்தரவாதம் வேண்டும் என்ற அச்சம் தான்.

மக்களின் இந்த அச்சம் நியாயமானது தான்.  சென்னைக்கும், புதுவைக்கும் இடையிலான பயணத் தொலைவில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு விபத்தாவது நடக்காமல் இருந்தால் அது அதிசயம் தான்.

அதற்கு காரணங்கள் உள்ளன. நான் உருவாக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில் நான் நெடுஞ்சாலையாக இல்லை.... இன்னும் வளைவுச்சாலையாகவே வாடுகிறேன்.

நான் உருவாக்கப்படும் வரை, அங்கு தொடர்ச்சியான சாலை எதுவும் இல்லை. சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மட்டும் தான் மாமல்லபுரம் செல்ல முடியும். கிழக்கு கடற்கரையை ஒட்டி சிறிய கிராமச்சாலைகள் மட்டும் தான் இருந்தன. அவற்றில் தொடர்ச்சியாக பயணம் செய்ய முடியாது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக மட்டும் தான் செல்ல முடியும்.

2000-ஆவது ஆண்டு வாக்கில் தான் கிராம சாலைகள் இணைக்கப்பட்டு சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு என்னை அமைத்தார்கள். 2002-ஆம் ஆண்டில் தான் நான் 154 கிராமங்களை இணைக்கும் வகையில் இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டேன். அன்று தொடங்கி இன்று வரை  பெரும்பான்மையான பகுதிகள் வழியாக இரு வழிச்சாலையாக  நெளிந்து தான் நான் பயணிக்கிறேன்.

திருவான்மியூரில் தொடங்கும் நான் முதலில் புதுச்சேரி வரை தான் அமைக்கப்பட்டேன். பின்னர் கடலூர் வரையிலும், அதன்பின்னர் நாகப்பட்டினம் வரையிலும் நீட்டிக்கப்பட்டடேன். ஒருகட்டத்தில் இராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரையிலும், நிறைவாக கன்னியாகுமரி வரையிலும் நான் நீண்டேன். இப்போதும் என் மீது  சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை  பயணிக்க முடியும். ஆனால், பயணத்தின் முடிவில் உள்ளங் காலில் தொடங்கி உச்சந்தலை வரை தாங்க முடியாத வலி பரிசாகக் கிடைக்கும். எனது நிலை அவ்வளவு மோசமாக உள்ளது. 

கிராமச் சாலைகளை இணைத்து அமைக்கப்பட்ட சாலை என்பதால் குழந்தை வரைந்த கோடு போலத் தான் நான் வளைந்து நெளிந்து செல்வேன். வளைவுகளில் இரு வாகனங்கள் வேகமாக வந்தால் அவை மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளாவது நிச்சயம். 

இந்த வளைவுகளை சரி செய்து, என்னை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்துங்கள் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால்,  ஆட்சிக்கு வருபவர்கள் இதுகுறித்து பேசுகிறார்களே தவிர, எதையும் செய்வதில்லை. புதுச்சேரியிலிருந்து  சென்னைக்கு செல்ல இப்போது 3 மணி நேரம் ஆகிறது. நான்கு வழிப்பாதையாக மாற்றினால் ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க என்னை கிழக்கு கடற்கரைச்சாலை என்று சொல்வதை விட இயற்கை அழகுச் சாலை என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு எனக்கு இரு பக்கமும் இயற்கை அழகுகள் பரவிக்கிடக்கின்றன. ஒரு புறம் வங்காள விரிகுடா கடல். மறுபுறம் Back Water  எனப்படும் உப்பங்கழிகள். உப்பங்கழிகளின் சிறப்பு என்பது கடல் நீரும், நன்னீரும் சேர்ந்து இருப்பது தான். அங்கு வளரும் மீன்கள் மிகவும் சுவையாக இருப்பதாகச் சொல்வார்கள்.

எனது இருபுறமும் மாமரங்கள், பலா மரங்கள், தென்னை மற்றும் பனை மரங்கள் நிறைந்து காணப்படும். ஆங்காங்கே ஏரிகள், சதுப்பு நிலங்கள், அவற்றிற்கு விருந்தினராக வரும் பறவைகள்,  காலையிலும், மாலையிலும் வானில் அணிவகுத்து பறக்கும் பறவைகள் என காண்பவர்களின் கண்களுக்கு காட்சி விருந்து படைக்க ஏராளமான அம்சங்கள் உள்ளன. பக்கிங்காம் கால்வாய் தோன்றும் இடத்தையும், பாலாறு கடலில் கலக்கும் காட்சியை கண்டு இன்புறும் வாய்ப்புகளும் உண்டு.

வழி நெடுகிலும் எனது இருபுறமும் பெண்கள் மீன் விற்பார்கள். என் மீது பயணிப்பவர்கள் மீன்களை  வாங்கிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். மரக்காணம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உப்பு விளையும் உப்பளங்களும் உண்டு.

என்னைச் சுற்றியுள்ள இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே வந்தால் புதுவையிலிருந்து சென்னைக்கு பயணிக்கும் நேரமும் தெரியாது; பயணக் களைப்பும் தெரியாது. ஆனாலும் இப்போது என் மீது பயணிப்பவர்களால் இவை எதையும் அனுபவிக்க முடியாது. 

காரணம்... 

பயணத்தை தொடங்கும் போதே எப்படியாவது விபத்தில் சிக்காமல் ஊர் சென்று சேர்ந்து விட வேண்டும் என்ற படபடப்பு மனதில் ஒட்டிக் கொள்ளும். பாதுகாப்பான சாலை இருந்தால் தான் அதை ஒட்டிய அழகை அனுபவிக்க முடியும்.  என்னை எப்போது நான்கு வழிச்சாலையாக மாற்றுவார்கள்?  எப்போது என் மீது மக்கள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிப்பார்கள்? என்ற ஏக்கம் என்னை வாட்டிக் கொண்டே இருக்கிறது. அந்த ஏக்கம் எப்போது தீரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.


 

Post a Comment

0 Comments