நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதையுடன் மதிப்பு மிக்க வாழ்க்கை வாழ்வதற்கு அனைத்து உரிமையும் உள்ளது. அந்த உரிமையில் தலையிட்டு, அவனது சுய கெளரவத்தையும், சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் புகழையும், மதிப்பையும் கெடுப்பதே அவதூறு ஆகும்.
ஒருவரின் உயிர், உடல், சுதந்திரம் மற்றும் சொத்துரிமை போன்ற உரிமைகளை போன்றே, ஒருவரின் மதிப்பும், மரியாதையும் சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுகிறது. எவ்வித சட்ட முகாந்திரமும் இல்லாமல் ஒரு நபரின் மதிப்பையும், கெளரவத்தையும் சீர்குலைக்க எவருக்கும் உரிமையில்லை.
ஒருவரின் மதிப்பு என்பது அவரைப் பற்றி அவர் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் கருத்து அல்ல. மாறாக மதிப்பு என்பது அந்நபரைப் பற்றி அவரைச் சுற்றியுள்ள இந்த சமுதாயம் கொண்டிருக்கும் கருத்தாகும். அதுபோல ஒருவருடைய குணநலனுக்கும் (character?) அவருடைய மதிப்பிற்கும் (reputation) வேறுபாடுகள் உள்ளன. குணநலன் என்பது அந்நபரின் தனிப்பட்ட நடத்தையில் அவர் காட்டும் சிறப்பியல்புகளாகும். அந்நபரின் அச்சிறப்பியல்புகளை கண்ட இந்த சமுதாயம் அவரை நல்லவர் என்றும் பண்பில் சிறந்தவர் என்றும் கருதி அவரை உயர்ந்த அந்தஸ்தில் வைத்து புகழ்வது அவரது மதிப்பாகும்.
ஒருவர் அவரது வாழ்வில் செய்த நற்செயல்களை வைத்தே மதிப்பு என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரின் குணநலன்கள் மீது இழைக்கப்பட்ட தீங்கை சட்டம் அவதூறாக கருதாது. மாறாக அவரின் மதிப்புக்கு தீங்கு இழைக்கப்பட்டால் அது அவதூறாகும்.
அவதூறு இரண்டு வகைகளாக உள்ளது.
1. நிலை வடிவ அவதூறு (libel)
2. வாய்மொழி அவதூறு (slander)
ஒரு நபரின் மதிப்புக்கு ஊறுவிளைவிக்கத்தக்க பொய்யான அவதூறான கூற்று ஒன்றை நிரந்தரமான வடிவம் ஒன்றின் மூலம் வெளியிடுவது நிலை வடிவ அவதூறாகும். தாளில் எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட வெளியீடுகள், ஓவியம், புகைப்படம், சிற்பம், மெழுகுச்சிலை, சிலை, உருவபொம்மை, கேலிச்சித்திரம் ஆகியவை நிலை வடிவ அவதூறாகும்.
நிலையற்ற, தற்காலிகமான வடிவத்தில் வார்த்தைகள் அல்லது கைகைகள் மூலமாக ஒருவரின் மதிப்புக்கு ஊறுவிளைவிக்கத்தக்க கூற்றினை பேசுவது அல்லது வெளியிடுவது வாய்மொழி அவதூறாகும்.
அவதூறு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. இந்த சட்டத்தின் பிரிவு 499 ல் அவதூறுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எவையெல்லாம் அவதூறு ஆகாது என்பதற்கான பத்து விதிவிலக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் அவதூறு எந்த வடிவில் இருந்தாலும் அது குற்றமாகவும், தீங்காகவும் கருதப்படுகிறது.
நிலை வடிவ அவதூறுக்காக இழப்பீடு கோரும் வாதி அதை நீதிமன்றத்தில் நிரூபித்தாலே போதுமானது. அதனால் வாதிக்கு ஏற்பட்ட இழப்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்விழப்பு வாதிக்கு ஏற்பட்டதாக சட்டமே அனுமானம் செய்து கொள்கிறது.
ஆனால் வாய்மொழி அவதூறுக்காக வழக்கிடும் வாதி தனக்கு ஏற்பட்ட இழப்பை கட்டாயமாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். மேலும் வாய்மொழி அவதூறில் எதிராளிக்கு தீங்கெண்ணம் இருந்ததை வாதி நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கில் வெற்றி பெற முடியாது.
நிலை வடிவ அவதூறுக்காக இழப்பீடு கோரும் வழக்கை அவதூறு வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் வாய்மொழி அவதூறை பொறுத்தவரையில் வழக்கை அவதூறான வார்த்தை பேசப்பட்ட நாளிலிருந்து அல்லது குறிப்பிட்ட இழப்பு ஏற்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அவதூறுக்காக இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்ய கீழ்கண்ட முக்கிய கூறுகள் இருக்க வேண்டும்.
1. தீங்கெண்ணம்
2. அவதூறான கூற்று
3. அவதூறு வாதியை குறிப்பதாக இருக்க வேண்டும்.
4. அவதூறு வெளியிடப்பட்டிருக்க வேண்டும்
5. அவதூறு வாதியை மதிப்பிழக்க செய்ய வேண்டும்.
நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவதூறு இழைக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர் எவரும் அவதூறுக்காக இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதில்லை. ஏனெனில் நம் மக்களிடையே உரிமை பற்றிய விழிப்புணர்வும், தீங்கியல் சட்டம் பற்றிய அறிவும் இல்லை. மேலும் இந்த மாதிரியான வழக்குகள் தொடர ஆகும் வழக்குச் செலவுகளும் அதிகமாக இருப்பதால் பலர் தீங்கியல் சட்டத்தின் பலனை பெற முடிவதில்லை



0 Comments