காலம் எங்கோ தொடங்கி
எங்கோ செல்கிறது.
இடையில் வந்த நாம்
ஆண்டு, மாதம், வாரம், நாள்,மணி, நொடி,
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம்.
ஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் காலம்.
காலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.
காலத்தைப் புரிந்து கொள்ளாத போது காலம் முதலாளி!
காலத்தைப் புரிந்து கொள்ளும் போது காலம் நல்ல பணியாளன்..!
காலத்தைப் புரிந்துகொள்ளாதபோது..
காலத்தின் கையில் குழந்தையாய் நாம்
நமது கையில் பொம்மையாய் காலம்!
அழகிய குளத்தில் தாமரையாய் காலம்
தாமரைக் குளத்தில் தவளையாய் நாம்!
குப்பைக்கு நடுவே புதையலாய் காலம்
புதையலை மூடிய குப்பையாய் நாம்!
விதையுள் மறைந்த மரமாய் காலம்
மரத்தை வெட்டும் கருவியாய் நாம்!
இசையின் நடுவே மௌனமாய் காலம்
ஓசையை கேட்கும் பேதையாய் நாம்!
காலத்தைப் புரிந்துகொண்டபோது...
ஆழமான கடலாய் காலம்
கடலை கடக்கும் கப்பலாய் நாம்!
உயரமான வானமாய் காலம்
பறந்து திரியும் பறவையாய் நாம்!
புல்லாங்குழலின் துளைகளாய் காலம்
அதில் காற்றை நுழைக்கும் மேதையாய் நாம்!
பாலையில் தோன்றும் கானல்நீராய் காலம்
மண்ணைக் குளிர்விக்கும் மழைத்துளியாய் நாம்!
கல்லுள் மறைந்த சிற்பமாய் காலம்
கல்லைச் செதுக்கும் சிற்பியாய் நாம்!
காலம் எல்லோருக்கும் பொதுவானது.
பயன்படுத்துபவர்கள் தான் வேறுபட்டவர்களாக உள்ளார்கள்.
காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!
காலத்தைப் புரிந்து கொண்டவர்கள்வரலாறு படைக்கிறார்கள்!!

0 Comments