கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நான்கு வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கவர்ச்சி திட்டத்தில் பணம் தொலைப்பது கொங்கு பகுதி மக்களுக்கு வழக்கம். தற்போது அது போல் காடு வாங்கி கைமாற்றி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
7 லட்சம் மதிப்புள்ள இடத்தை 40 லட்ச ரூபாய்க்கு வாங்குகிறார்கள், எதற்காக வாங்குகிறார்கள் என்றால் முதலீடு என்று போலியாக ஒரு கதையை கிளப்பி விடுகிறார்கள்.
அக்ரிமெண்ட் போட்டு கிரேயம் கூட செய்யாமல் பல இடங்கள் கை மாறுகிறது, தற்போதைய சூழ்நிலைக்கு வருமானவரி துறை பிரச்சனை இல்லாமல் கணக்கில் வராத பணத்தை பயன்படுத்த இந்த ஒரு தொழில் தான் இருக்கிறது. காரணம் ஒரு கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கினால் 5 லட்சம் கணக்கில் காட்டினால் போதும்.
கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் பரிவர்த்தனை அனைத்தையும் வருமான வரித்துறையினர் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் பெரிய ஆப்பு ஒன்று அதிகப்படியான நபர்களுக்கு வரப்போகிறது.
இவ்வளவு தொகை கொடுத்து வாங்கிய இடத்தில் விவசாயம் செய்யப் போகிறார்கள் என்றால் அதுவும் கிடையாது அப்படி விவசாயம் செய்து அதில் சம்பாதிக்க முடியுமா என்றால் அதுவும் கிடையாது.
தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி, பல்லடம், சோமனூர், பெருந்துறை, பவானி, ஈரோடு, கோவை, திருப்பூர், பகுதியில் எந்தவித தொழிற்சாலையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வராது என்கிற பகுதியில் யாரோ சொல்லும் பொய்யை நம்பி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அந்த இடத்தின் மதிப்பு ஐந்திலிருந்து ஏழு லட்சம் வரை மட்டுமே இருக்கும், ஆனால் சம்பந்தமில்லாமல் நாற்பது, ஐம்பது லட்ச ரூபாய் என்று விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
15 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயி நல்ல தண்ணீர் வசதி மற்றும் விளைச்சல் இருந்தால் வருடம் 5 லட்சம் சம்பாதிப்பது பெரிய குதிரை கொம்பான விஷயம். புல் பூண்டு கூட முளைக்காத காலியிடங்களை எதற்காக இவ்வளவு விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டால், வாங்கி விற்று கை மாற்றினால் லாபம் கிடைக்கும் என்று ஒரு பதில் தான் வருகிறது.
கூடிய விரைவில் நிலத்திற்கு அடையாளக் குறியீடு (Land Adhar) அமலுக்கு வர உள்ளது, அதன் பின் அரசாங்கம் தெளிவாக ஒவ்வொரு இடத்திற்கும் விலை நிர்ணயம் செய்து விடும்.
இன்று கிரயம் செய்ய உள்ள வழிகாட்டி மதிப்பு தான் அதிகாரப்பூர்வமான இடத்தின் உண்மையான மதிப்பாகும். இதை கைடுலைன் வேல்யூ vs மார்க்கெட் வேல்யூ என்று கெஜட்டில் நிர்ணயம் செய்து வருகிறார்கள். நீண்ட முதலீடு என்று கணக்கில் வைத்தால் கூட இன்னும் இருபது வருடத்திற்கு அந்த இடத்தின் மதிப்பு ஏறாது.
காரணம் எந்தப் பயன்பாட்டுக்கும் இன்றி வெறுமனே யாரும் அவ்வளவு தொகையை முடக்கி வைப்பது புத்திசாலித்தனம் கிடையாது. மாறாக ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது, குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரின் பெயரிலும் இவ்வாறு கொண்டு வந்தால் கூட சாதாரணமாக 30 லட்ச ரூபாயை ஒரு வருட வருமானமாக கணக்கில் கொண்டு வந்து விடலாம்.
இதற்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் கூட ஆடிட்டர் fees செலவாகாது. கணக்கில் உள்ள பணத்தை முறையாக பல வகையில் முதலீடு செய்ய முடியும் மற்றும் அது தான் பாதுகாப்பும் கூட.
இனிமேல் அவசியத் தேவை மற்றும் சொந்த தேவை தவிர வேறு எதற்காகவும் இடத்தை வாங்க வேண்டாம்.
அதே நேரத்தில் பணத்தை இரட்டிப்பு செய்து தருகிறேன் என்று திரியும் நபர்களையும் நம்ப வேண்டாம் அவர்கள் எவ்வளவு நெருங்கிய சொந்தமாகவும் நட்பாக இருந்தாலும் சரி.
பல பெரிய தொழில்களில் நீங்கள் பங்குதாரர்களாக இணைய முடியும், வருடம் 40 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் முதலீடு போடும் தொழில் நல்ல தொழில்,
அது சம்பந்தமாக பல விவரங்கள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கிறது, படித்துப் பாருங்கள்.
தேவையின்றி இடத்தை வாங்கி எதிர்கால சந்ததிகளுக்கு எதுவும் சேர்த்து வைக்காமல் விட்டுவிடாதீர்கள்.
அன்புடன்
N. பழனியப்பன்
Consultant
STARTUP Tamilnadu
0 Comments